எது கர்த்தருக்கு பயப்படும் பயம்?
"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" (நீதி.1:7a). "கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்"(நீதி.10:27a) இப்படியாக கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் வருகிற ஆசீர்வாதங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்" (நீதி.8:13a) என்ற நேரடியான பதிலையும் நாம் வேதத்திலிருந்து பெற்றுக்கொள்கிறோம்.
மற்றுமொரு பதிலை நாம் ஆபிரகாமின் வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. "பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்த படியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்"(ஆதி.22:12). ஈசாக்கை தகனபலியாகப் பலியிடு என்று தேவன் சொன்னதை அப்படியே நிறைவேற்ற ஆபிரகாம் செயல்பட்டபோது தேவன் சொன்னதே "நீ தேவனுக்குப் பயப்படுகிறவன்" என்று அறிந்திருக்கிறேன் என்பதாகும்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது தேவன் சொன்னதை நூறு சதவீதம் அப்படியே நிறைவேற்றுவதே அவருக்குப் பயப்படுகிற பயமாகும். எபிரெயர் ஆக்கியோன் அதை மேலும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மூலம் உறுதிப்படுத்துகிறார். "அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு..."(எபி.5:7,8)
மேலும் இதிலிருந்து கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களின் ஜெபம் கேட்கப்படும் என்ற மற்றொரு ஆசீர்வாதத்தையும் அறிந்து கொள்கிறோம். கர்த்தருக்குக் கீழ்ப்படிவோம் நம் ஜெபத்திற்கான பதிலையும் பெற்றுக் கொள்வோம். ஆமென்.
Click here to read this post in english - What is the fear of the Lord?
Comments
Post a Comment