நாம் எப்படி?

ஆபிராமுக்கு அழைப்பு வந்தது. அழைத்தவர் கர்த்தர். “நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ (ஆதி 12:1).” இதுதான் அழைப்பு. கர்த்தர் சொன்னபடியே தன் தேசத்தையும், தன் இனத்தையும், தன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு ஆபிராம் புறப்பட்டார். கானான் தேசத்தில் சேர்கிறார். அங்கு கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்றார் (ஆதி 12:7). தேசத்தைச் சுற்றித் திரிந்து பிரயாணம் பண்ணுகையில், அத்தேசத்திலே கொடிய பஞ்சம் உண்டாயிற்று. பஞ்சத்தின் நிமித்தம் எகிப்துக்கு போகிறார். பஞ்சம் அவரை அவர் விட்டு வந்த தேசத்திற்குக் கொண்டு போகவில்லை. என்னே உறுதி பாருங்களேன்!

வருடங்கள் கடந்தன. வாக்குத்தத்தத்தின் மகனும் பிறக்கிறார். வளர்கிறார். ஆபிரகாம் தன் மகனுக்காக பெண் தேடும் நேரமும் வந்தது. ஆபிரகாம் தன்  குமாரனுக்கு கானானியருடைய குமாரத்திகளில் பெண் கொள்ள விரும்பவில்லை. தன் தேசத்தில், தன் இனத்தாரிடத்திலிருந்து பெண்ணைக் கொண்டு வரும்படியாக, நிபந்தனையோடு தன் ஊழியக்காரனை அனுப்புகிறார். “நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக் கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு (ஆதி.24:6).” தான் விட்டு வந்த தேசத்திற்கு திரும்பச் செல்லக்கூடாது என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் பாருங்கள்! எபிரேயர் ஆக்கியோன் இதை எவ்வளவு அழகாக பதிவு செய்துள்ளார் என்று கவனியுங்கள். “தாங்கள் விட்டு வந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப் போவதற்கு அவர்களுக்குச் சமயங் கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள் (எபி. 11:15,16).”

ஆபிரகாம் இவ்வாறிருக்க, இஸ்ரவேலரைப் பற்றி சற்றே சிந்திப்போம்.  அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து கர்த்தரே இஸ்ரவேலரைப் புறப்படப் பண்ணினார். சுதந்திரப் பூமியை நோக்கிப் பயணித்தனர் இஸ்ரவேலர். வனாந்தரப் பயணமாயினும், குறைவுகளை நிறைவாக்குகிற கர்த்தரோடான இன்பப் பயணம் அது. பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் இஸ்ரவேலரிடத்திலிருந்து விலகிப் போகவில்லை.

வானத்தின் தானியமான மன்னா கிடைத்தது. தூதர்களின் அப்பத்தைச் சாப்பிட்டனர். கன்மலைகளிலிருந்தும், மகா ஆழங்களிலிருந்தும் தண்ணீரைப் பருகினர். ஆயினும் தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக்கேட்டு, தேவனுக்கு கோபமூட்டினர். அவர்களது நினைவு அடிமைத்தன வீட்டிலிருந்ததே அவர்கள் தேவனை விசனப்படுத்தியதற்கான காரணம். “எகிப்திலே  கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக் காய்களையும், கொம்மட்டிக் காய்களையும், கீரைகளையும், வெங்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம் (எண். 11:5).”

நாம் எப்படி?  நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம்? “...பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய  சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே (கொலோ. 3:9,10).” பழைய மனுஷனை களைந்து போட்டு, புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டவர்களாய், உள்ளான மனுஷனிலே வல்லமையாய்ப் பலப்பட்டு, நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிற அனுபவத்திற்குள்ளாகச் சென்று கொண்டிருப்போமேயானால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

அப்படியில்லாமல், ஒருவேளை, விட்டு விட்ட பழைய வாழ்க்கையை நினைத்துக் கொண்டிருக்கிறோமா? பழைய சுபாவம் அவ்வப்போது எட்டி எட்டிப் பார்க்கிறதோ? எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடந்து கொண்டிருப்போம்? இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம்  நிலையற்றவனாயிருக்கிறான் என்பதை உணர்ந்து மனந்திரும்புவோம். பரம தேசம் சமீபத்தில் தான் இருக்கிறது. வாருங்கள் சுதந்தரிப்போம்.

“கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக் கொண்டு ஜெயிக்கப்பட்டால்,  அவர்களுடைய பின்னிலைமை  முன்னிலைமையிலும்  கேடுள்ளதாயிருக்கும் (2 பேதுரு 2:20).” 

இந்நிலைமை நமக்கு வேண்டாமே. 

“குமாரன்  கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்;  கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் (சங். 2:12).”

Click here to read this post in English 

Comments

Popular Posts