இலகுவான சுமை!
மிகவும் குறுகியதான இவ்வாழ்க்கைப் பயணத்திலே, நாம் துன்பம், துக்கம், துயரம், வருத்தம், வேதனை, சோதனை போன்ற பல்வேறு வகையான பாரங்களைச் சந்திக்கிறோம். ஆயினும், அவைகளை மேற்கொள்ள நமக்குத் தேவையான சத்துவத்தை அருளுகின்ற தேவனுக்கு ஸ்தோத்திரம்! இப்படிப்பட்ட கிருபை நமக்கு அருளப்பட்டிருக்கிற போதிலும், நம்மில் பலர் நமது பாரங்களை நாமே சுமந்து தவிக்கிறோம். ஏன்?
ஒருவேளை, இதைப் படித்துக் கொண்டிருக்கும் போதே, நம்மை வருத்திக் கொண்டிருக்கிற பாரங்கள் பதட்டத்துடன் நம் நினைவுக்கு வரலாம். பொதுவாக, நமது பாரங்கள் இவ்வுலக வாழ்வின் தேவைகள் மற்றும் நெருக்கங்கள் பற்றியே இருக்கிறது. ‘என் வருங்காலத் தேவைகள் எப்படி, யாரால் சந்திக்கப்படும்?’ ‘இந்நிகழ்காலப் பணிகளை எப்போது, எப்படி முடிப்பேன்?’ ‘ஏன் என்னைச் சுற்றி இருப்பவர்கள் எப்போதும் எனக்கு விரோதமாகவே செயல்படுகிறார்கள்?’ இது போன்ற கேள்விகள், எண்ணங்கள், மற்றும் வருத்தங்கள் நம்மைத் துவண்டுபோகப் பண்ணுகின்றன. இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் நமது கடந்த காலத் தவறுகளின் குற்ற உணர்வினாலும், நம்மை நெருங்கி அழுத்திக் கொண்டிருக்கிற பாவபாரத்தினாலும் தவிக்கிறோம். (என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப்பெருகிற்று, அவைகள் பாரச் சுமையைப் போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று. சங்கீதம் 38:4.)
எனினும், நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து, நமது பாரங்களையெல்லாம் நீக்கி நமக்கு இளைப்பாறுதல் தரும்படி நம்மைத் தம்மிடமாக அழைக்கிறார்.
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.” மத்தேயு 11:28-30.
ஆனால், இதை அறிந்திருந்தும், நாம் அடிக்கடி நமது கவலைகளிலும் குற்ற உணர்விலும் மூழ்கி, அதையே சுமந்து தவிக்கிறோம்; ஏன்? கிறிஸ்துவின் போதனையை முழுமையாக பின்பற்றாததே இதற்கான காரணமோ? "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கிறிஸ்து சொல்லியிருக்கிறாரே! இப்போது நமக்குள்ளாக வருகின்ற கேள்வி, இந்த “நுகம்” என்பது என்ன? இது நமது சுமைகளுக்கு மேல் ஒரு வேதனையைச் சேர்ப்பது போல் தோன்றலாம். ஆனால் இந்த “நுகம்”அப்படிப்பட்டதல்ல. நம்மை முன்னமே அழுத்தி சோர்வடையச் செய்து கொண்டிருக்கிற நுகத்திற்கு மாற்றாகத்தான் இயேசு தனது நுகத்தை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். அவருடைய நுகம் எளிதானது. இந்த நுகமானது தேவனுக்கு நாம் செய்ய வேண்டிய சேவை மற்றும் கடமையைக் குறிப்பதாகும். அதாவது, அவரது ஆளுகைக்குள் அன்பின் பிரஜைகளாக இருந்து கொண்டு, அவரது கட்டளைகளுக்கு மனமகிழ்வோடு கீழ்படிவதே அந்த நுகமாகும். நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. 1 யோவான் 5:3. பொறுமையுடனும் தாழ்மையுடனும் கர்த்தருக்காக உண்மையும் உத்தமுமாக உழைக்க நுகத்தை ஏற்றுக் கொள்வது என்பது இவ்வுலகிற்காக நாம் சுமக்கும் நுகத்தைவிட சிறந்தது மற்றும் எளிதானது. இது ஒரு அன்பின் நுகம். நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. 1 யோவான் 3:23.
இவ்வாறாக, கிறிஸ்துவின் கட்டளைகளின் நுகமானது எளிதானது. மட்டுமல்ல, நமது பாரங்களின் சுமையைக் காட்டிலும், கிறிஸ்துவை பின்பற்ற நாம் சுமக்க வேண்டிய சிலுவை இலகுவான சுமையே. இது இலகுவான ஒன்றாக இருப்பினும், “சுமை” என்று அழைக்கப்படுவது விசித்திரமாக இருக்கிறது. ஏன் இது சுமை என்று அழைக்கப்படுகிறது? இது எதை உள்ளடக்கியது? இங்கே சுமை என்பது நாம் கருதும் பாரம் அல்ல; இது நம் கடமையையும், வாழ்வின் பொருளையும் குறிக்கிறது. சிலுவையின் சுமை நம்மை வருத்தும் மற்றும் ஒடுக்கும் விஷயங்களை உள்ளடக்காமல், நமக்கு ஒரு நோக்கத்தைத் தருகிறது. எளிமையாகச் சொன்னால், சிலுவையின் சுமை அன்பு மற்றும் பொறுப்புணர்வின் சுமை.
அன்பின் சுமை:
'பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.' யோவான் 15:9-10.
பிதா மற்றும் கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்பது மிக மிக முக்கியம். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. ஆம், தேவன் நம் மீது வைத்திருக்கும் அன்பு ஒருநாளும் மாறாததே; இருப்பினும், நாம் நம் சுயத்தின் மீதும் உலகத்தின் மீதும் கொண்டிருக்கும் அன்பானது நம்மை சிருஷ்டித்தவரும் மீட்டுக் கொண்டவருமாகிய தேவன் மீது கொள்ள வேண்டிய அன்புடன் போட்டியிடுகிறது. இது நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரு சவால். மட்டுமல்ல கண்டிப்பாக நமது முழு முதல் அன்பு தேவனாகிய கர்த்தர் மீதே இருக்க வேண்டும்.
பொறுப்புணர்வின் சுமை:
'நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.' யோவான் 15:16.
நாம் ஏதோ ஒரு காரணத்திற்காகவே தேவனால் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவரைக் குறித்தும் ஒரு தனித்துவமான நோக்கம் தேவனுக்கு உண்டு. அது சரியான நேரத்திலே தேவபிரசன்னத்திலே வெளிப்படுத்தப்படும். அதே சமயத்தில், நம் பரலோகப் பிதாவின் மகிமைக்காக, நல்ல கனிகளைக் கொடுப்பது எல்லோருக்குமான பொதுவான நோக்கமாகும். பரலோக ராஜ்யத்தின் சாட்சிகளாகவும் தூதுவர்களாகவும் இருப்பதே நமது பொறுப்பாகும்.
கிறிஸ்துவின் மீதான அன்பு மற்றும் பொறுப்புகளின் நிமித்தம் நமக்கு சில கஷ்டங்கள் வரலாம். கிறிஸ்துவுக்காக உத்தமமாய் நிற்கும் போது நாம் சில துன்பங்களை எதிர்கொள்ளலாம், எனவே சுமை மகிழ்ச்சியாக இல்லாமலிருக்கலாம். ஆயினும், பிதாவின் பிரசன்னத்தாலும், குமாரனின் ஆளுகையாலும், பரிசுத்த ஆவியானவரின் தேற்றுதலாலும் சுமை இலகுவாகவே இருக்கும்.
இறுதியாக, கிறிஸ்துவிடமிருந்து கற்றுக் கொள்ள மறக்க வேண்டாம். ஏனென்றால், நமக்கு எல்லாவற்றிலும் எல்லாமும் அவரே; போதகரும் போதனையும் அவரே, வழிகாட்டியும் வழியும் அவரே. அவர் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். நாம் அவரை முழுமையாக நம்பி அவரைப் பின்பற்ற வேண்டும். பாமாலை கூறுவது போல:
காரிருளில் என் நேச தீபமே, நடத்துமேன்;
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்;
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்;
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன்.
இக்கட்டுரையிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய படிப்பினை இது தான்: சேரும் இடம் மட்டுமே தெரிந்த இவ்வாழ்க்கை பயணமோ சற்று கொந்தளிப்பானதே. தனிமையாக நமது சுமையுடன் பயணிப்பதும் சாத்தியமற்றதே. நமக்குத் தேவை கிறிஸ்துவின் சிலுவை மட்டுமே. இது இலகுவான, மெதுவான, அன்பு மற்றும் பொறுப்புணர்வின் சுமையே. வாழ்க்கைப் பயணம் முழுவதும் நமக்கு வழிகாட்டி, காத்து, சமாதானத்துடன் நடத்துகிற நல் மேய்ப்பரும் நம்முடனே! அவரிடத்தில் நம்மை ஒப்புவித்து, இயேசுவே நீர் என் மாலுமியாயிருந்து, என் வாழ்க்கை பயணத்தை நடத்தும் என்று சொல்வோமா!
Comments
Post a Comment