இரட்சிப்பின் வெளிப்பாடு

'பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.' 1 தீமோ. 1:15.

ஆம் இயேசு கிறிஸ்து நம்மை இரட்சிப்பதற்காகவே இந்த உலகத்திற்கு வந்தார். அதாவது, நம்முடைய ஆத்துமாவை பாவத்திலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் மீட்கும்படியாகவே வந்தார். இயேசு கிறிஸ்துவையும், அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் பலியானார் என்பதையும் விசுவாசித்து, உண்மையான மனந்திரும்புதலோடு, நம்மை அவருடைய கரங்களில் அர்ப்பணிக்கும் போது அவர் அருளும் இரட்சிப்பை நாம் பெற்றுக் கொள்ள முடியும். இப்படியாக இரட்சிப்பு என்பது வெளியரங்கமாக்கப்பட்டிருந்த போதிலும், இரட்சிப்பு என்பது பல காரணங்களால் கடினமான ஒன்றாகவே பலருக்கு உள்ளது. இதில் ஒரு காரணம் என்னவெனில் அநேகர் தங்களை பாவிகள் என்றும் அந்தப் பாவத்திலிருந்து இரட்சிப்பு அவசியம் என்பதையும் உணராமல் இருப்பதே ஆகும். ஆத்துமாவின் இரட்சிப்பு அல்லது பாவத்திலிருந்து ஆத்துமா மீட்கப்பட வேண்டிய அவசியம் உலக துன்பங்களிலிருந்து நாம் மீட்கப்பட வேண்டிய அவசியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இருப்பினும் பாவமும் உலக துன்பங்களும் பெரும்பாலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஆயினும் நம்மை நாம் அறிந்ததை விட நம்மை நன்கு அறிந்த கர்த்தர், நமக்கான இரட்சிப்பின் திட்டத்தை வேதாகமத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேவன் தம்முடைய ஜனங்களின் உபத்திரங்களைப் பார்த்து மௌனமாக இருக்கிறவர் அல்ல. அவர்களது உபத்திரங்களிலிருந்து அவர்களை விடுவிக்க, அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட இரட்சகர்களை அனுப்புகிறதை வேதாகமத்திலே பார்க்கிறோம். குறிப்பாக இஸ்ரவேல் ஜனங்களின் உபத்திரங்களைக் கண்ட தேவன், அவர்களை விடுவிக்க மோசையைத் தெரிந்து கொண்டார்.

'அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார். ' யாத்திராகமம் 3:7,9-10.

எனினும் ஜனங்களின் விடுதலைக்காக, தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள், அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டுகின்றனர். இருப்பினும் சரியான நேரத்தில் தேவன் தம்முடைய விடுதலையின் திட்டத்தை நிறைவேற்றுகிறார். தன் சுய பராக்கிரமத்தினாலே, இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க முயன்று தோற்றுப் போய், பார்வோனிடத்தினின்று தப்பியோடிய மோசே, 40 ஆண்டுகளில் சாந்தத்தையும், தாழ்மையையும் கற்றுக் கொண்டார். இதுவே இஸ்ரவேல் ஜனங்களை மீட்க அவர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாயிருந்தது. தேவனுடைய தெரிந்தெடுப்பிற்கு, மோசே அவரது கடந்த கால தோல்வியின் நிமித்தம் தயக்கம் காட்டின போதிலும் தேவன் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தி, இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்து வர அவரை வழி நடத்தினார்.

கடந்த காலத் தோல்விகளைப் போலவே பயங்களும், பாரபட்சங்களும் இரட்சிப்பின் வெளிப்பாட்டைத் தடுக்கின்றன. இதை நாம் அனனியா மற்றும் யோனாவின் வாழ்க்கையில் பார்க்க முடியும். அனனியா பவுலை பற்றி கேள்விப்பட்டிருந்தார். பவுல் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களை கட்டுவதற்காக தமஸ்குவுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்திருந்தார். எனவே பவுல் பார்வை பெற உதவுவதில் அவருக்கு தயக்கம் இருந்தது. அவர் தனது சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப்பட்டு இருந்திருக்கலாம். ஆயினும் கர்த்தர், இரட்சிப்பின் திட்டத்தில் பவுலின் முக்கியத்துவத்தை அனனியாவுக்கு வெளிப்படுத்தி அவர் தனது பங்கை நிறைவேற்ற ஊக்குவித்தார்.

யோனாவின் குணாதிசயம் இன்னும் சுவாரசியமானது. யோனா நிச்சயமாகவே கர்த்தருடன் நெருக்கமான உறவில் இருந்தார். அவர் தேவன் பணித்த வேலையில் இருந்து தப்பி ஓட அவருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருந்தன. ஆனால் அவர் கர்த்தரால் திரும்பக் கொண்டு வரப்பட்டு தேவனது சித்தத்தை நிறைவேற்றினார். அது நினிவேக்குச் சென்று அதன் அழிவை அறிவிப்பது தான்.

'யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒரு நாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று கூறினான். ' யோனா 3:4.

யோனாவின் அறிவிப்பைக் கேட்ட நினிவேயின் மக்கள், தங்கள் பாவத்தைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, தேவனுக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்தினர். அவர்களது மனந்திரும்புதலைப் பார்த்த கர்த்தர் அவர்கள் மீது தீர்மானித்திருந்த நியாயத் தீர்ப்பைத் தள்ளி வைக்கிறார். ஆனால் அந்தத் தீர்ப்பு யோனாவுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. காரணம் அவர் பிரசங்கித்தபடி நடக்காததாக இருக்கலாம் அல்லது அவரது ஜனங்களைக் குறித்த வைராக்கியமும், எதிரி நாடு அழிவிலிருந்து தப்பியது கூட அவரது வருத்தமாக இருக்கலாம். எதுவானாலும், யோனா தேவனை நன்றாக அறிந்திருந்தார் என்பதை நாம் தெளிவாக அவரது பதிலிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

'கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன். ' யோனா 4:2.

கிருபையும் இரக்கமுள்ள கர்த்தரோ தம்முடைய கண்ணோட்டத்தை, யோனாவிற்கு ஒரு செடியின் மூலமாக விளங்க வைக்கிறார். மேலும் யோனா புத்தகம் தேவனுடைய அன்பும்,மனதுருக்கமுமுள்ள இருதயத்தை வெளிப்படுத்தி நிறைவடைகிறது.

'அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும் நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.' யோனா 4:10-11.

யோனா தேவனுடைய இருதயத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கக் கூடாது மற்றும் தேவன் மீது கோபப்படுவதற்கோ, வருத்தப்படுவதற்கோ அங்கு இடம் இல்லை என்று நாம் எளிதாகச் சொல்லிவிடலாம். யோனாவினுடைய அந்த தனிப்பட்டக் கருத்து இரட்சிப்பின் வெளிப்பாட்டை தாமதித்தது. நாமும் கூட பல நேரங்களில் நம்முடைய சொந்த தனிப்பட்ட கருத்துகளின் நிமித்தம் தெரிந்தோ தெரியாமலோ இரட்சிப்பின் வெளிப்பாட்டிற்குத் தடையாக மாறி விடுகிறோம். அல்லது தாமதிக்கப் பண்ணுகிறோம். உலகம் முழுவதும் துன்மார்க்கத்துக்குள் கிடக்கிறது. எனவே உடனடியாக நியாயத்தீர்ப்பு அவசியம் என்று எண்ணி விடுகிறோம். ஆயினும் ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பின் (கோபத்தின்) தாமதம் துன்மார்க்கரைத் தப்ப விடுவதற்காக அல்ல மாறாக எல்லாரும் மனந்திரும்பவேனடுமென்று பொறுமையாய் இருப்பதே என்பதை உணரத் தவறி விடுகிறோம். நினிவேயிலும் துன்மார்க்கர் இருந்தார்கள். அதுவே அழிவுக்கான தீர்ப்பைக் கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் உண்மையாய் மனந்திரும்பினபடியினாலே தேவனது இரக்கத்தைப் பெற்றனர். ஆயினும் சில ஆண்டுகளுக்குப் பின்பு அந்த நகரம் அழிந்து போனது. மீண்டும் பாவம் பெருகினதே அந்த நியாயத்தீர்ப்புக்கு காரணமாயிற்று.

இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பட்ட இரத்தத்தினாலே நமக்கு இரட்சிப்பு உண்டாயிற்று. முதல் மனிதனின் பாவத்தினாலே இரட்சிப்பின் தேவை உணரப்பட்டது. தேவனும் இரட்சிப்பின் திட்டத்தை விரைவில் வெளிப்படுத்தினார். ஆதாம் முதல் இயேசு கிறிஸ்து வரை, கர்த்தர் பல்வேறு அடிமைத்தனத்திலிருந்தும் அடக்குமுறையாளர்களிடமிருந்தும் நேரடியாகத் தலையிட்டு மீட்டதன் மூலம் இரட்சிப்பின் வெளிப்பாட்டை முன்னறிவித்தார். இது இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது. இறுதியாக கிருபை மற்றும் விசுவாசத்தின் மூலமாக இரட்சிப்பின் வெளிப்பாடு நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடிய காரியம் அல்ல.

கிறிஸ்து சிலுவையிலே உயர்த்தப்பட்டு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்றியும் விலையேறப்பெற்ற இரட்சிப்பின் வெளிப்பாடு கர்த்தருடைய திட்டத்தின்படி இன்றளவும் உலகமெங்கும் பறைசாற்றப்பட்டு வருகிறது. முதல் நூற்றாண்டிலே பவுலும் அவரது உடன் ஊழியர்களும் சுவிசேஷத்தைத் தீவிரமாக அறிவித்தனர். ஆயினும் குறிப்பிட்ட பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்க ஆண்டவரால் தடுத்தாட்கொள்ளப்பட்டனர் ஒருவேளை அது ஆண்டவருடைய வேளையாக இல்லாதிருந்திருக்கலாம். அல்லது அந்த பகுதியைச் சந்திக்க வேறொரு நபர் ஆண்டவருடையத் திட்டத்தில் இருந்திருக்கலாம். இருப்பினும் அவர்கள் பரிசுத்த ஆவியால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நேராக வழி நடத்தப்பட்டனர்.

'அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு, மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார். அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள். அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி, ' அப்போஸ்தலர் 16:6-10.

கர்த்தருடைய பெரிதான கிருபையினாலே இந்த இரட்சிப்பின் வெளிப்பாடு நமக்கு கிடைத்துள்ளது. தேவனை நம்புகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்ற விசுவாசம் நமக்கு உண்டு. இப்போது இந்த இரட்சிப்பின் வெளிப்பாட்டைப் பகிர்ந்து கொள்ள கர்த்தருடைய ஊழியராக செயல்பட நாம் ஊக்குவிக்கப்படும் போது, நாம் அந்த அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து நாம் பெற்ற இரட்சிப்பை, கர்த்தர் நமக்கு காட்டும் இடத்தில் பறைசாற்ற வேண்டும். நம்முடைய கடந்த கால தோல்விகள், பாகுபாடுகள் மற்றும் பயங்கள் இந்த உன்னதமான பணியைச் செய்ய நம்மை தடுத்தாளக் கூடாது. ஆமென்.

Comments

Popular Posts