இன்றைய இரட்சகர், நாளைய நியாயாதிபதி!

கிறிஸ்துமஸ் - அகில உலகமும் கொண்டாடும் ஒரு பண்டிகை. ஆம் உலக இரட்சகர், உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கப் பிறந்ததை நினைவு கூரும் தினம். பல தீர்க்கதரிசிகள் பல்வேறு காலங்களில் உரைத்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலே கிறிஸ்துவின் பிறப்பு. ஆம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிறிஸ்துவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது. கிறிஸ்துவைக் குறித்ததான தீர்க்கதரிசனங்களையும் அதன் நிறைவேறுதலையும் காண்போம்.

கிறிஸ்துவின் பிறப்பு

ஏசாயா தீர்க்கதரிசி கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து “இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் (ஏசாயா 7:14).” என்று முன்னறிவித்தார்.

மட்டுமல்ல மீகா தீர்க்கதரிசி கிறிஸ்து பெத்லகேமில் பிறப்பார் என்று முன் அறிவித்தார். “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார் (மீகா 5:2).” என்ற வேதவாக்கியங்களின்படியே கிறிஸ்துவும், கன்னிகையான மரியாளிடத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறந்தார்.

கிறிஸ்துவின் ஊழியம்

ஏசாயா தீர்க்கதரிசி (ஏசாயா 9 ஆம் அதிகாரத்தில்) உரைத்தபடியே இயேசு கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய பிறஜாதியாருடைய கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார். இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

கிறிஸ்துவின் மரணம்

“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசாயா 53:4,5).” ஏசாயா தீர்க்கதரிசி உரைத்தபடியே இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தம் செய்யும்படியாக வாரினால் அடிக்கப்பட்டார்; முள்முடி சூட்டப்பட்டார்; சிலுவையில் அறையப்பட்டார். பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்

“என் மீட்பர் உயிரோடிருக்கிறார் அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் (யோபு 19:25).” “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர் (சங்கீதம் 16:10).” என்ற வேதவாக்கியங்களின்படியே கிறிஸ்துவும் உயிர்த்தெழுந்தார்; தம்முடைய சீஷர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக் கொண்டது (அப்.1:9). கிறிஸ்துவின் முதல் வருகையைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அப்படியே நிறைவேறியது.

நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனம்

“அவர் (கர்த்தர்) வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார் (சங்கீதம் 96:13).” “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென் (வெளி1:7).” இரட்சகராக வந்த இயேசு கிறிஸ்து நியாதிபதியாக வருகிறார். இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது எப்படியோ அப்படியே இரண்டாம் வருகையைக் குறித்த தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும். “இதோ(இயேசு) சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது (வெளி.22:12).” ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும். கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தமாவோம். நித்திய வாழ்வினைப் பெறுவோம்!

Comments

Popular Posts