மறந்து விட்டோமே!

அனைவருக்கும் 78வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என வீர முழக்கமிட்டு விடுதலை வேட்கையை ஊட்டிய மகாகவி பாரதியை மறந்து விட்டோமா? சுயராஜ் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கிய பால கங்காதர திலகரைத் தான் மறந்து விட்டோமா? கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனாரை மறந்து விட்டோமா? ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தான் மறந்துவிட்டோமா? இல்லையே.

ஒவ்வொரு ஆண்டும் நாம், நம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து கொண்டு தானே இருக்கிறோம். அப்படியானால் எதை மறந்து விட்டோம். சுதந்திர இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனக் கூறுகிற நாம் இன்னும் அடிமைகளாகத்தான் இருக்கிறோம் என்பதைத்தான் மறந்து விட்டோம். நாங்கள் எதற்கும் என்றும் அடிமைகள் அல்ல என்று நினைக்கிறீர்களோ?

பாவம் செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறான் என்று பரிசுத்த வேதம் கூறுகிறது. நம்மை நாமே சற்று ஆராய்ந்து பார்ப்போம். நம் எண்ணங்கள், நினைவுகள், சிந்தனைகள் எப்படிப்பட்டதாய் இருக்கிறது? கட்டுக்கடங்காத கோபம், இச்சைகள், பொறாமைகள், பெருமைகள், பேராசைகள், எரிச்சல்கள் மற்றும் பெருளாசைகள் நம்மை ஆட்சி செய்து கொண்டுதானே இருக்கின்றன.மேலும் நம்மில் அநேகர் YouTube க்கும் TV தொடர்களுக்கும் அடிமைகள். ஆன்லைன் விளையாட்டை நிறுத்தத்தான் முடிகிறதா? முடியவில்லை அல்லவா! அப்படியானால் ஆன்லைன் விளையாட்டு நம்மை ஆண்டு கொண்டு தானே இருக்கிறது. வேறு சிலர் நண்பர்களுக்கு அடிமைகள். " பேசாத வார்த்தைக்கு நீ எஜமான் பேசிய வார்த்தை உனக்கு எஜமான்" என்பது யாவரும் அறிந்த வாக்கு. அப்படியானால் எத்தனை வார்த்தைகளுக்கு நாம் அடிமைகள். இன்னும் சிலர், நம் சிருஷ்டிகரால் ஓய்வு நாள் என்று ஒரு நாள் நமக்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணராமல் எல்லா நாளும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதாவது நாம் அடிமைகளாகத்தான் இருக்கிறோம் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற விரும்புகிறீர்களா. இயேசு கிறிஸ்து மட்டுமே நமக்கு விடுதலையைத் தர முடியும். ஏனெனில் அவர் நம்முடைய பாவத்திற்காக இரத்தம் சிந்தி மரிக்கும்படியாகவே இந்த பூமிக்கு வந்தார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். மரித்த கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இன்றும் தூய ஆவியானவராக நம்மோடு இருந்து நம்மை வழிநடத்த விரும்புகிறார். அவருடைய ஆளுகைக்குள் வந்து விட்டால் வேறு எதுவும் நம்மை அடிமைப்படுத்த முடியாது. அவருடைய ஆளுகைக்குள் வருவீர்களா.

மட்டுமல்ல, நம்முடைய பாவங்களுக்காக மரிக்கும்படியாக வந்த கிறிஸ்து, மீண்டுமாக நம்முடைய கிரியைகளுக்கான பலனை அளிக்கும்படியாக சீக்கிரமாய் வரப்போகிறார் என்ற நல்ல செய்தியும் நமக்கு உண்டு. அவரை தரிசிக்கும் அந்த பாக்கிய நாள் சமீபத்தில்தான் இருக்கிறது. அவரை சந்திக்க ஆயத்தமாக வேண்டுமே.

மேலும் நாடு நமக்கு என்ன செய்தது? என்று கேட்கிற நாம் நாட்டிற்காக என்ன செய்தோம்? என்று என்றாவது சிந்தித்து இருக்கிறோமா. நம்மைச்சுற்றி தேவையுள்ளோர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தேவன் நம்மை ஆசீர்வதித்திருப்பது அவர்களோடு நமக்கு உள்ளதைப் பகிர்ந்து கொள்ளத்தான். அடுத்தவர்களின் கஷ்டங்களைப் பார்க்காதபடிக்கு நம் கண்களையும் காதுகளையும் அடைத்துக் கொண்டிருக்கிறோமா? நன்மை செய்யப் பழகுவோம். "மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்ககடவது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular Posts